யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டதை கண்டித்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வர்த்தகர் சங்கங்களும், பொது அமைப்புகளும் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பிரதான நகரங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி போயுள்ளன.
வவுனியாவில்
இதற்கமைய வவுனியா நகரில் சில வியாபார நிலையங்கள் கொவிட்-19 தொற்றுகாரணமாக ஏற்கனவே மூடப்பட்டிருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து ஏனைய வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
நகரை அண்டிய பகுதிகளான பூந்தோட்டம், குருமன்காடு கோவில்குளம், போன்ற இடங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் முழுமையாக மூடப்பட்டது.
அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
கிளிநொச்சியில்
இதேவேளை முழு அடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சி பளை பிரதேசத்திலும் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டிருந்ததுடன் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
மான்னார் மாவட்டத்தில்
இதனையடுத்து மன்னார் மாவட்டத்திலும் முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.
அதற்கமைய மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன் தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது.
அத்தோடு பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மட்டகளப்பிலும் ஹர்த்தால்..
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வில்லை. மேலும் நகரில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படாமல் பல்வேறு பகுதிகளும் வெறிச்சொடிக் காணப்பட்டன.