யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கையெடுப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்று அதிகாலை மாணவர்களை சந்தித்த துணைவேந்தர், அதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு அனுமதிப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் தமது போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இதனை தொடர்ந்து நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் ஆரம்பமானது.