யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கெதிராக வட, கிழக்கில் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது அமைப்பின் எட்டு மாவட்ட நிர்வாகமும் பூரண ஆதரவை வழங்குகின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி. பத்மநாதன் கருணாவதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி எமது அமைப்புக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள சிறிலங்கா அரசின் இந்த அராஜக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எமது அமைப்பின் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.