உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களை தான் விரைவில் சந்திக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இன்று இரவு துணைவேந்தரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.இதன்போது உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களின் கையொப்பம் இடப்பட்ட மகஜர் ஒன்றும் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு முடிவடைந்ததன் பின்பு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாங்கள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இதன்போது மாணவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் துணைவேந்தரிடம் கையளித்திருந்தோம்.
அந்த கோரிக்கையை முற்றுமுழுதாக தான் ஏற்றுக்கொள்வதாக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.
அது மாத்திரமின்றி அதற்கான அனைத்துக்கட்ட வேலைகளையும் தான் ஆரம்பித்து வைப்பதாகவும், அத்தோடு பேரவை ஊடாக இதனை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாகவும்,
மற்றும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்களை வெகு விரைவில் தான் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதனை உறுதி செய்து கொள்ளும்வரை நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே இதனை கருத்தில் கொண்டு துணைவேந்தர் வெகு விரைவில் மாணவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.