January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தான்தோன்றித்தனமான தலையீட்டுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

இறந்தவர்களை நினைவு கூர்வதென்பது ஜனநாயகத்தை மதிக்கும், மனிதநேயத்தை நேசிக்கும் எந்தவொரு நாகரிக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையாகும்.

இந்த உரிமையை பறித்துவிட்டு காயப்பட்ட வடக்கின் இதயத்தில் மீண்டும் உதிரம் சிந்தவைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,தான்தோன்றித்தனமான தலையீடுக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜனநாயகத்தை, மனித நேயத்தை மதிக்கும் சகல மக்களிடமும் வேண்டுகிறோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றி பொறுப்பாளர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் நினைவுச் சின்னத்தை உடைத்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளது. 08ம் திகதி இரவு இதை அகற்றத் தயாராகும் போது மாணவர்களும் பிரதேச மக்களும் எதிர்த்தமையால் பல்கலைக்கழகத்திற்கு ஆயுதப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக நடைபெற்ற படுகொலை யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்துள்ளனர். அங்கவீனமடைந்துள்ளனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால், அது, மனித நேயம் மரணித்த காலம். அந்த படுகொலை யுத்தத்தில் பலியாகிய தமது உறவினர்களை, நண்பர்களை, தமக்கு நெருக்கமானவர்களை நினைவு கூர்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நினைவுச் சின்னத்தை நிர்மாணித்திருந்தனர்.

பொது சமூக நோக்கத்திற்காக, இறந்த மனிதர்கள் தெற்கிலும் நினைவு கூரப்படுகின்றனர். நினைவுச் சின்னங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முப்பது வருட யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் தூபிகள் தெற்கில் ஏராளமாக உள்ளன. அவர்கள் நினைவு கூரல் விழாக்களை நடத்துகின்றனர்.

இலவச கல்விக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் அரசினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை நினைவு கூர்வதற்காக மாணவ வீரர் நினைவுத் தூபிகள் பல்கலைக்கழக மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட மனிதர்களை நினைவு கூர்வதற்காக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 20ம் திகதி பல்கலைக்கழகங்களில் மாணவ வீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அதேபோன்று, 71 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது, 88-89 பயங்கர காலத்தில் கொலை செய்யப்பட்ட மனிதர்களை நினைவு கூர்வதற்கான நிகழ்ச்சிகள் தெற்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இறந்த மனிதர்களை நினைவு கூரும் அந்த உரிமை வடபுல மக்களுக்கும் அவ்வாறே கிடைக்க வேண்டும். அவர்கள் நடத்திய போராட்டம் நீதியானதா அநீதியானதா என்பது தனியாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

அரசியல் கருத்து பேதங்கள் எதுவாக இருந்தாலும் தமக்காகத் தோற்றி நின்று இறந்ததாகக் கருதப்படும் மனிதர்களை நினைவு கூர வடபுல மக்களுக்கும் உரிமை உண்டு.

இது ஜனவரி 08ம் திகதி நடந்த தனிப்பட்ட சம்பவமல்ல. இதற்கு முன்பும் வடபுலத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நிகழ்ச்சிகளை அரசாங்கம் தடை செய்தது. ஆயுதங்களைக் கொண்டு அவற்றை தடுத்தது. இப்போது இறந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலாகுமெனக் கூறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணையமும், அரசாங்கமும் கை கழுவிக்கொள்ள தயாராகின்றன. ஆனால், இது அரசாங்கம் திட்டமிட்டு செய்த செயலாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வடக்கில் இறந்தவர்கள் நினைவு கூரும் தினங்களை தடை செய்ய வேண்டுமென, சின்னங்களை அகற்ற வேண்டுமெனச் சொல்வது தீவிரவாதம் உருவாவதை தடுப்பதற்காம். ஆனால், ஆட்சியாளர்கள் அறிந்து கொண்டே தீவிரவாதம் வேரூன்றுவதற்காக மீண்டும் நிலத்தை செப்பனிடுகிறார்கள்.

நினைவுச் சின்னங்களை நிர்மாணிப்பதாலோ அல்லது நினைவு கூரல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ தீவிரவாதம் உருவாவதில்லை. அதை மிதித்து சிதைத்து விடுவதால்தான். எனவே, தெற்கில் போன்றே வடக்கிலும் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை உண்டென்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறந்தவர்களை நினைவு கூர்வதென்பது ஜனநாயகத்தை மதிக்கும், மனிதநேயத்தை நேசிக்கும் எந்தவொரு நாகரிக சமூகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையாகும்.

இந்த உரிமையை பறித்துவிட்டு காயப்பட்ட வடக்கின் இதயத்தில் மீண்டும் உதிரம் சிந்தவைக்கப் பார்க்கிறார்கள்.

ஆகவே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இறந்தவர்களின் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டதை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற வகையில் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த தான்தோன்றித்தனமான தலையீடுக்கு எதிராகுமாறு ஜனநாயகத்தை, மனித நேயத்தை மதிக்கும் சகல மக்களிடமும் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.