July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை குறித்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2009 இல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூருவதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியை பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் இலங்கை அதிகாரிகள் நிர்மூலமாக்கியுள்ளனர்.

அங்கு சென்ற யாழ்.மாநகர முதல்வரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடுமையாக பேசினார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்,அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவதுடன், இன ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய தேவையற்ற இந்த நடவடிக்கையை நாம் கண்டிக்கின்றோம்.

உயிரிழந்த தங்களின் குடும்பத்தவர்களை நினைவுகூருவதற்கு அரசாங்கம் கடந்தவருடம் அனுமதி மறுத்ததையும் நாங்கள் நினைவுபடுத்துகின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் தலைவர் நினைவுத்தூபியை இடிக்க மறுத்தமைக்காகவே முன்னைய துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய துணைவேந்தரை நியமிப்பதற்காக ஜனாதிபதி விதித்த முன்நிபந்தனை நினைவுத்தூபியை இடிக்கவேண்டும் என்பதாகயிருக்கலாம் என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இன அடிப்படையிலான அரசாங்கம்,தமிழர் வரலாறு, பாரம்பரிய,ம் உயர்கலாசாரம், நாகரீகம், அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் தொட்டிலாக காணப்படுகின்ற யாழ்.பல்கலைக் கழகத்தினை பலவீனப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி என்றே நாங்கள் கருதுகின்றோம்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக பார்க்கவேண்டியிருக்கிறது.

உலகின் நாகரீகம் மிக்க நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆகியன இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தயக்கமின்றி கண்டிக்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..