July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணியை மீட்டுத்தருமாறு கோரி மயிலத்தமடு,மாதவணை பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவணை எல்லைப் பகுதியில் தமது கால் நடைகளை தேடிச் சென்ற பண்ணையாளர்களை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் மறைவானதொரு இடத்திற்கு கடத்திச் சென்று தாக்கியதுடன், மாகோயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தமைக்கு நியாயம் வேண்டியும், தமது பூர்வீக காணியை மீட்டுத்தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியின் அருகாமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கால் நடை பண்ணையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘அரசே இன அழிப்பை மேற்கொள்ளாதே’,’மேய்ச்சல் தரையை உறுதிப்படுத்து’,’எமது நிலம் எமக்கு வேண்டும்’,மகாவலி என்ற போர்வையில் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்காதே’,’பண்ணையாளர்கள் எம்மினத்தின் முதுகெலும்பு’ போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கரடியனாறு பொலிஸா ர் குறித்த விடயம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடத்தப்பட்டவர்கள் மாகோயா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக தடுத்து வைக்கப்பட்டதுடன், நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என பொலிஸார் அறிவித்துவிட்டு சென்றனர்.

அத்துடன் இச்செயலை செய்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார்,போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்..

இதன்போது கரடியனாறு பொலிஸ் பிரிவான தங்கள் எல்லைப் பிரதேசத்திலே வைத்து தாக்குதல் மேற்கொண்டபோதிலும் மகோயா பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகும் என போராட்டக்காரர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லும் நபர்களுக்கு அச்சுறுத்தல் இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று 6 பண்ணையாளர்கள் மயிலத்தமடு,மாதவணை பகுதியில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை விவசாயிகளினால் குறித்த பண்ணையாளர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.இதில் ஒருவர் காயமுற்ற நிலையில் மாகோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேசம் தமிழ் பண்ணையாளர்கள் பாரம்பரியமாக மேய் ச்சல் தரையாக பயன்படுத்திய பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் விவசாய செய்கைக்காக குடியமர்த்தப்பட்டுள்னர்.இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியும் அவர் இதனை கண்டு கொள்ளவில்லையென பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ,கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என பலரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் தமது கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

This slideshow requires JavaScript.