July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,380 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 487 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,325 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 3 உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்காமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளருக்கு கொரோனா தொற்று

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்திற்குள் சென்றுள்ள அதேவேளை, அங்கு சபை முதல்வரின் அலுவலக ஊழியர்கள் சிலருடன் நெருக்கமான தொடர்புகளை பேணியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்தள்ளார்.

ஹக்கீமுடன் தொடர்புகளை பேணிய எம்.பிக்கள் அடையாளம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ள நிலையில், அவருடன் பாராளுமன்றத்தில் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி  எதிர்க்கட்சி உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, தலதா அதுகோரல, எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், பைசல் காசீம், எம்.எம்.ஹரீஸ், என்.எம்.தௌபீக், நசீர் அஹமட் ஆகியோர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணிய முதல்நிலை நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு சுகாதார அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த 30 பேருக்கு தொற்று

ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக தொற்றுக்கு உள்ளாகியுள்ள விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் கந்தக்காடு, புனானை களுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொலிஸ் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.