July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது தமிழரின் உணர்வுகளின் உறைவிடம்”

முள்ளிவாய்க்கால் நினைவிடம் வெறுமனே கல்லாலும், மண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் அல்ல. மாணவர்களதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உணர்வுகளின் உறைவிடமும் நினைவுகளின் நீட்சியுமாகும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் உச்சமாகும். அது தமிழ் மக்களது உணர்வுகளில் கலந்துறையும் ஒரு விடயம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ் நினைவிடம் அமைக்கப்பட்ட போதும் அதன் பின்பும் அரசு அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. அதனை நீக்க அரசு முயற்சித்தப் போதும் மாணவர்களதும் மக்களதும் உணர்வுகளோடு கலந்த விடயமென்பதால் அது முடியாத காரியமாகியது என மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த யாழ் பல்கலைக்கழக நிர்வாகம், அதனை இடித்தழிக்க நடவடிக்கை எடுத்தமை கண்டனத்துக்குரியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே பல்கலைக்கழக நிர்வாகம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்றை மீளவும் அமைக்க முன்வர வேண்டும் என மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் சம்பவத்தை கண்டித்தும், நினைவிடத்தை மீளவும் அமைக்க வலியுறுத்தியும் நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.