
வடக்கு, கிழக்கில் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நாளைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள பாரராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்கும் இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.