![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/DSC00593-1.jpg?fit=1024%2C577&ssl=1)
File photo
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
அத்தோடு மாவட்டத்தின் 25 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்கு நாளை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
கொரோனா அச்சம் காரணமாக பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகமாக பொது மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு உணவகங்களிலிருந்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளுக்கு பூட்டு!
நாளை நாடளாவிய ரீதியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் ஆரம்பமாக உள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்தின் 25 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.