
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.
இதில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் என பலரும் கந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அனைத்து தொழிற்சங்கங்களும் அதிலிருந்து வெளியேற வேண்டுமென்று தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு அவர்கள் வெளியேறினால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கலாம் எனவும், ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காது இழுத்தடிக்கப்படுவதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.