January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்ததாக ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனக்கு கடுமையான உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை தான் தொடர்ந்தும் விமர்சித்தால், தன்னை ‘ஒரு நாயைக் கொலை செய்வதைப்’ போன்று கொலை செய்துவிட முடியுமென்று அம்பாறையில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்ததாகவும் ஹரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் முழுப் பெயரைக் கூறி, விமர்சித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் போது ஜனாதிபதி “பித்தளை சந்தியில் என் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்று தெரியும் தானே… நந்திக்கடல் களப்பிலிருந்து தூக்கி வந்தார்கள்.. அப்படியும் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்” என்று அம்பாறையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளை ஜேஆர்ஜே, பிரேமதாச, டீபீ, சந்திரிக்கா, மகிந்த அல்லது சிறிசேன என அழைக்கப்பட்டாலும், அவர்களில் ஒருவரும் அதற்காக அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும் ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் கடமைகளில் இருந்து அவர் தவறும் போது, தான் விமர்சிக்கத் தயங்குவதில்லை என்று தெரிவித்துள்ள ஹரின் பெர்னாண்டோ, தனக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.