January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவசியம் ஏற்பட்டால் எனது இன்னொரு பக்கத்தையும் காண்பிக்கத் தயார்’: ஜனாதிபதி கோட்டாபய

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் அரசை விமர்சித்து ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தேவைப்பட்டால் தன்னிடம் உள்ள இன்னொரு பக்கத்தையும் காண்பிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

அம்பாறை உஹன பிரதேச செயலகப் பிரிவின் லாஹுலவில் இடம்பெற்ற கிராம மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரை ஆற்றியபோது, ஜனாதிபதியை ‘நந்தசேன’ என அவரது முதல்பெயர் கொண்டு விளித்திருந்தார்.

அதுபற்றி பேசியுள்ள ஜனாதிபதி, “நான் நந்தசேன கோட்டாபய தான். இது நல்ல பெயர் தான். அனால், நந்தசேன கோட்டாபயவுக்கும் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன” என்று கூறினார்.

“ஜனாதிபதி கோட்டாபயவாக இல்லாமல், முன்பிருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய தான் எமக்கு வேண்டும், சற்று கடுமையாக இருக்க வேண்டும் என்று பௌத்த தேரர்கள் இன்றும் என்னிடம் கேட்கிறார்கள். அதையும் செய்யத் தயார் ” என்றும் தெரிவித்தார் ஜனாதிபதி.

“பித்தளை சந்தியில் என் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்று தெரியும் தானே.. நந்திக்கடல் களப்பிலிருந்து தூக்கி வந்தார்கள்.. அப்படியும் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்” என்றும் கூறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ.

அரசியலில் மாற்றம் கொண்டுவரவே மக்கள் தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அம்பாறையில் உரையாற்றிய ஜனாதிபதி கூறினார்.