இலங்கையின் தெற்கு மற்றும் வடக்கின் ஒற்றுமைக்குத் தடையாக அமையும் என்ற காரணத்தினாலேயே யாழ். பல்கலைக்கழக யுத்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நினைவுச் சின்னத்தை அகற்றும் தீர்மானம் யாழ். பல்கலைக்கழக உபவேந்தரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை மையமாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டு இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காலத்துக்கு காலம் அது புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் 1,500 க்கும் அதிகமான சிங்கள மாணவர்களும், நாட்டின் தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் அதிகமான தமிழ் மாணவர்களும் கற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு மத்தியில் பிரிவினைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘யாழ். பல்கலை உபவேந்தரின் செயற்பாடு காலத்துக்குப் பொருத்தமானதொன்றாகும். எமக்கு யுத்தத்தின் நினைவுகள் அவசியமில்லை. சமாதானத்தின், ஒற்றுமையின் நினைவுகளே அவசியமாகும்’ என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது அகற்றப்பட வேண்டியதொன்று எனவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சுற்று நிரூபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதே துணைவேந்தரின் கடமை என்றும் அதன் அடிப்படையிலேயே நினைவுச் சின்னத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தில் சிறியளவான ஏதேனுமொன்றைக் கட்ட வேண்டுமென்றாலும், உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.