எதனை அழித்தாலும் எமது உரிமைகளையும் உணர்வுகளையும் அழிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டுள்ளமை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை போர் வெற்றியை கொண்டாடும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் அதேவேளை இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்று சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர் என்றும், இதில் கூட எமக்கான, எமது மக்களுக்கான உரிமை இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.