யாழ். பல்கலைக்கழக பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றும் உடனடியாக அங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உறவுகளை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம், இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்கப்படுவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடிக்கப்பட்ட நினைவுத் தூபி யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்தே, நினைவுத் தூபியை பல்கலைக்கழக நிர்வாகம் இராணுவப் பாதுகாப்புடன் அகற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றும் இந்தச் சம்பவம் இராணுவ ஒடுக்குமுறையின் வெளிப்பாடு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அடக்குமுறைகள் வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை சிங்கள சகோதரர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.