யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்தும், அந்த நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
9 மாணவர்கள் இவ்வாறாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் வீதியோரத்தில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதியில் கொட்டகை அமைத்து இந்த போராட்டத்தை நடத்துவதற்கு யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அனுமதியளித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து நேற்று இரவு முதல் பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆனபோதும், தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக கூட்டமாக இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி 9 மாணவர்கள் மாத்திரம் தற்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இன்று மாலை முதல் அதனை உணவுத் தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.