July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது’

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்மை தொடர்பில் அவர் தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த நினைவுத் தூபியானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை நினைவுகூருமுகமாக அமைக்கப்பட்டது. அதனை இரவோடிரவாக இடித்தழித்துள்ளமை மிக மோசமான நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கும் இந்த நடவடிக்கைக்கு தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளே தமிழ் மக்களை நீண்ட போராட்டத்திற்குள் தள்ளியதாகவும் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை கொந்தளிக்க வைக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படியான அடக்குமுறை செயற்பாடுகளை அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்குமானால், இந்த நாட்டில் நிரந்தர அமைதியை என்றுமே காண முடியாமல் போய்விடும் என்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.