
உலகளாவிய ரீதியில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளைக் கொண்ட பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பேணுவது தொடர்பான கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளர்களின் செயற்பாடுகளை வாட்ஸ்அப் மூலம் கண்காணிக்கவும், அந்தத் தரவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் வாட்ஸ்அப் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
புதிய விதிகளுக்கான பயனாளிகளின் ஒப்புதலை வாட்ஸ்அப் நிறுவனம் பாப்-அப் செய்தி மூலம் கோரி வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கைகளின் படி, பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் காலம் உட்பட அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் தமது வணிக செயற்பாடுகளுக்காக ஏனைய சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புதிய கொள்கை மற்றும் வாட்ஸ்அப் பயன்பாட்டின் சேவை விதிமுறைகள் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
பயனாளிகள் தமது கையடக்க தொலைபேசி சாதனங்களில் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்தும் பயன்படுத்த விரும்பினால், புதிய நிபந்தனைகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலமே பயன்படுத்தலாம் என்றும் தெரியவருகின்றது.
மேலும், இதனை ஏற்க விரும்பாத பயனாளிகள், பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தும் வாய்ப்பை இழப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், பயனாளிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள புதிய விதிகள் காரணமாக வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டைப் பலர் தவிர்க்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.