இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மதுரங்குளி பாலச்சோலை பிரதேசத்தில் சுமார் 900 ஏக்கர் பரப்பில் முன்னெடுக்கப்படும் தென்னை, மரக்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்ச் செய்கைகளையும் 10 ஏக்கர் பரப்பில் முன்னெடுக்கப்படும் மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
இந்தப் பயணத்தின் போது மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு உடனடியாக அறிவித்து, அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலைக்கும் மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
அத்தோடு, பிரதேச மக்களின் வீதிப் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.