இலங்கையில் தண்டப் பணம் செலுத்த முடியாமல் உள்ள சிறைக் கைதிகள் அனைவரையும் அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே, இவ்வாறு கைதிகளை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
தண்டப் பணம் செலுத்த முடியாமல் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், முதல் கட்டமாக கைதிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பிணை வழங்க முடியுமான 8,000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழக்கு நடவடிக்கைகள் முடிந்து, தண்டப் பணம் செலுத்த வசதியின்றி சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.