November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலில் ஐஎஸ் அமைப்புக்கு உதவிய இலங்கையர் மூவருக்கு அமெரிக்காவில் குற்றப்பத்திரம் தாக்கல்

file photo: Facebook/ St. Anthony’s Shrine Colombo 13

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய மூன்று இலங்கையர்களுக்கு எதிராக அமெரிக்காவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மற்றும் அஹ்மட் மில்ஹான் ஆகியோருக்கு எதிராகவே அமெரிக்காவில் பயங்கரவாதக் குற்றங்களுக்காக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 268 பொது மக்களின் உயிர்களைப் பறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ‘ஐஎஸ்ஐஎஸ் இன் ஸ்ரீ லங்கா’ என்ற அமைப்பே பொறுப்பாகும் என்றும் அமெரிக்காவின் நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 5 அமெரிக்க பிரஜைகள் உட்பட 268 பேர் உயிரிழந்ததும், 500 க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்தப் பாகத்திலும் அமெரிக்கர்களைக் குறிவைக்கும் பயங்கரவாதிகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உறுதிசெய்வதாக இந்த வழக்கு அமைந்துள்ளது என்றும் கலிபோர்னியா மாநிலத்தின் சட்டமா அதிபர் நிக் ஹென்னா தெரிவித்துள்ளார்.

மொஹமட் நௌபர் என்பவர் ஐஎஸ் அமைப்புக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் பணியையும், மொஹமட் அன்வர் வெடி பொருட்களைத் தயாரிக்க உதவியதாகவும், அஹ்மட் மில்ஹான் பொலிஸ் அதிகாரியொருவரைக் கொலை செய்து, தாக்குதலுக்கான இடத்தைத் தெரிவுசெய்ததாகவும் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் எப்பிஐ இலங்கை அரச அதிகாரிகளின் உதவியுடன் கடந்த இரண்டு வருட காலமாக இந்த விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.