file photo: Facebook/ Sri Lanka Cricket
இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்ஜயவின் புதிய பந்துவீச்சு முறைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கையின் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக வளர்ந்துவந்த அகில தனஞ்ஜயவுக்கு 2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அவரது பந்துவீச்சு பாணி சர்வதேச விதிகளை மீறும் விதத்தில் இருப்பதாகவும். இதனால் அவர் பந்தை வீசி எறிவது போல் உள்ளதெனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம்சாட்டியிருந்தது.
இதனையடுத்து, கடந்த ஓராண்டு காலமாக தடையில் இருந்த அகில தனஞ்ஜய தனது பந்துவீச்சுப் பாணியை மாற்றிக்கொண்டு, அது தொடர்பான வீடியோ காட்சியை அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி, மீண்டும் பந்துவீச அனுமதி கோரியிருந்தார்.
அகில தனஞ்ஜயவின் புதிய பந்துவீச்சு பாணியை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழு ஆராய்ந்துள்ளதோடு, அவரது பந்துவீச்சு பாணியில் குறைபாடுகள் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, சர்வதேச கிரிக்கெட் பேரவை அகில தனஞ்ஜயவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அணியின் பல வீரர்கள் உபாதைக்குள்ளாகி இருப்பதுடன், சுழல் பந்துவீச்சாளர்கள் இன்றி தடுமாறும் நிலையில், அகில இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அகில தனஞ்ஜய 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன் இன்னிங்ஸ் ஒன்றில் 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை அவரது சிறந்த பந்துவீச்சும் ஆகும்.
சர்வதேச ஒருநாள் அரங்கில் 36 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் எனும் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்துள்ளார்.