தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சு நடத்தியுள்ளார். இது தொடர்பில் அடுத்த வாரம் விரிவான சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது:-
“கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியூடாக என்னைத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறினார்.
அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட நான், பேச்சை உடன் ஒழுங்கு செய்யுங்கள் என்று அமைச்சரிடம் தெரிவித்தேன்.
இந்தத் தகவலை நான் உடனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் தெரிவித்திருந்தேன்.
நாடாளுமன்றத்தில் அமைச்சரை நேரில் சந்தித்து இது தொடர்பில் உரையாட வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அதற்கமைய அவர்கள் இருவரும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.
சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுவிப்பது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது எனவும், அது பற்றி ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் கூறினார்.
அதற்கான முன்னேற்பாடாக அடுத்த வாரம் தனது அமைச்சில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று என்னைத் தொலைபேசியில் மீண்டும் தொடர்புகொண்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சில நிமிடங்கள் பேசினார். இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் தனது அமைச்சில் விரிவான பேச்சுக்கு ஒழுங்கு செய்யப்படும் என்றும், அதற்கான திகதியை அறிவிப்பேன் என்றும் அவர் என்னிடமும் கூறினார்.
அரசின் நடவடிக்கைக்கமைய தமிழ் அரசியல் கைதிகள் பிணையிலாவது விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும். இதை அமைச்சர் தினேஷிடம் நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தேன் என்று அவர் தெரிவித்தார்.