மாணவர்கள் இருவர் கைது
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வாயிலில் திரண்ட மக்கள்;
சிறப்பு அதிரடிப்படையினர் அழைப்பு
யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டதை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தடையையும் மீறி உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாஷும் உறுதி செய்துள்ளனர்.
பல்கலைக்கழக வாயில் முன் பெருமளவானோர் அமர்ந்து இருப்பதானால் எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம் என்ற அச்ச நிலை காணப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இன்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை அரசாங்கம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டுவருவதுடன்,கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்க மறுத்ததால் பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை 9 மணி தொடக்கம் இருந்துவருகிறது.