July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்தது: இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka Red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,304 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 656 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,317 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 3 உயிரிழப்புக்கள் பதிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது.

மட்டக்களப்பில் 25 பேருக்கு தொற்று உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 20 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 பேருக்கும், வெல்லாவெளி மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏறாவூரில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இருவரும் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளதாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதில் அக்கரைப்பற்று கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 863 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அக்கரைப்பற்று – 309, கல்முனை தெற்கு – 211, பொத்துவில் – 77, அட்டாளைச்சேனை – 88, சாய்ந்தமருது – 54, ஆலையடிவேம்பு – 36, இறக்காமம் – 24, சம்மாந்துறை – 27, கல்முனை வடக்கு – 17, திருக்கோவில் – 15, நிந்தவூர் – 13, காரைதீவு – 14, நாவிதன்வெளி – 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் 13 பேருக்கு தொற்று உறுதி

திருகோணமலை மாவட்டத்தில் 7 மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூதூர் சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 5 பேருக்கு தொற்று உறுதி

யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் 54 பேருக்கு தொற்று உறுதி

வவுனியாவில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 204 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையிலேயே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.