File Photo: Facebook/ Rishad Bathiudeen
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கத் தவறும் பட்சத்தில், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரபு நாடுகளின் எதிர்ப்பை அரசாங்கம் சம்பாதிக்க நேரிடும் என்று அகில மக்கள் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரித்துள்ளார்.
நாட்டின் கொவிட் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு உட்பட 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டுள்ள உரிமையையே தாம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது உலக முஸ்லிம்களையும் வேதனைக்குட்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று இல்லாத பலரது உடல்களும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடு இலங்கைக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கிவரும் அரபு நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.