January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தீவிரம்: சில பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக அடையாளம்

File Photo: Facebook/ Srilanka Red cross

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,  திருகோணமலை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, உகன ஆகிய சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சிவப்பு வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று காரணமாக 9 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்தாகவும் மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரையான காலப்பகுதியில்  திருகோணமலை மாவட்டத்தில் 193 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 332 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 53 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 915 பேருமாக மொத்தம் 1,493 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களில் 915 பேர் குணமடைந்துள்ளதாகவும், 595 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு வைத்திய சாலையிலும், திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று, குச்சவெளி வைத்தியசாலையிலும், அம்பாறை மாவட்டத்தில் தமன, பதியத்தலாவ வைத்தியசாலையிலும், கல்முனையில் பாலமுனை, மருதமுனை வைத்தியசாலைகளிலுமாக மொத்தம் 9 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இதில் பாலமுனை, மருதமுனை வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விசேட தனிமைப்படுத்தல் வைத்தியசாலைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைகளில் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் மாத்திரமன்றி இலங்கையில் ஏனைய பகுதிகளிலுமிருந்து 2,795 பேர் உள்வாங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 2,262 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 518 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரனாவுக்கு இணையாக டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருவதாகவும், இரண்டும் தொற்று நோய்கள் என்பதுடன், குறித்த நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் வெவ்வேறாக காணப்படுகின்றமையால் ஒரு இக்கட்டான நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.