இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எல்லா மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு வாக்களித்த பௌத்த, சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்பட முடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களாக நாம் முன்னோக்கி செல்லப் போகின்றோமா அல்லது தொடர்ந்தும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, இனங்களாகப் பிரிந்து, பின்னோக்கிச் செல்லப் போகின்றோமா என்பதை ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்புத் துறைகளில் வேலை செய்பவர்கள் தவறிழைத்தால், அவர்களுக்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவதே வழமையான நடைமுறையாக இருந்தாலும், இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்தவர்களுக்கு பதவி உயர்வுகளும், பதக்கங்களும், மன்னிப்பும் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமன்றி, நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் தமிழ் சிறைக் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அத்தனை பேரும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.