இலங்கையில் இணையம் மூலம் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கொழும்பு – நுகேகொட பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 22 போலி அடையாள அட்டைகள், 18 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 29 இலத்திரனியல் வங்கி அட்டைகள், 12 கையடக்கத் தொலைப்பேசிகள், மடிக்கணினி மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த சந்தேக நபர்கள் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நைஜீரிய பிரஜைகளினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இணையம் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுமாறும், வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் பொது மக்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.