இலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை 13 ஆம் திருத்தமேயாகும். அதனை நீக்கிவிட்டால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கி அதிகார பரவலாக்கலை செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயத்தின் போது தெளிவாகக் கூறினார் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 13 ஆம் திருத்தத்தை இல்லாது செய்வதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு உருவாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இலங்கை அரசியல் அமைப்பில் எமக்கென இருக்கக்கூடிய ஒரேயொரு விடயம் 13 ஆம் திருத்தமே என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் இடம்பெறும் என நான் நம்பவில்லை. எனினும் அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான பரிந்துரைகள் கேட்கப்பட்ட போது நாம் நியாயமான பிரேரணையை முன்வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
1972 மற்றும் 78 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புகளை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான பலத்துடன் தமிழர்களின் கோரிக்கைகளை நிரகாரித்து தாங்களாக ஒரு திட்டத்தை கொண்டு வந்ததை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் கூறினார்.
எனவே அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்தால் அதில் தமிழ் மக்களை ஒதுக்கிவிடாது, வருங்காலத்தில் இந்த நாட்டை அமைதியானதும், சிறந்த நாடாகவும் உருவாக்கும் திட்டத்தினை கையாள வேண்டும். அதற்கான ஆதரவை நாமும் தருவோம் என சித்தார்த்தன் இதன் போது குறிப்பிட்டார்.