July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம்’

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிரியைத் தனிமைப்படுத்தல், ஒதுக்குதல் என்பன யுத்த தந்திரங்களாகும் என்றும் அந்தக் கண்ணோட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களைப் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதால், கொவிட் நோயாளர்கள் கூட எதிரிகளாகத் தென்படலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர் ஒருவரிடம் ஹோட்டலில் ஒரு நாளைக்குத் தங்குவதற்கு 12,500 ரூபா அறவிடப்படுகின்றதாகவும், 14 நாட்கள் ஒரு நபர் ஹோட்டலில் தங்கியிருக்க 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, விமான பயணச் சீட்டின் விலை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு, நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவுசெய்துகொள்ள பணம் அறவிடப்படுகின்றதால் ஒரு நபர் இலங்கையில் தனிமைப்படுத்தல் காலத்தில் மாத்திரம் இரண்டரை இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச தனிமைப்படுத்தல் நிலையங்களில் இட வசதிகள் இல்லாமையால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்படுகின்றதாகவும், இதற்கு மாற்றீடாக நாடு திரும்பும் இலங்கையர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.