இலங்கையில் திலீபன் நினைவேந்தலை நடத்துவது ஐநா சாசனம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் படி தமது மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி இந்த விடயத்தில் ஒத்த கருத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
யாழ். நீதிமன்றத்தால் அண்மையில் விதிக்கப்பட்ட தடையுத்தரவுக்காக பொலிசார் முன்வைத்த காரணங்களை மறுதலிக்கும் விதமாக அந்தக் கடிதத்தை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். திலீபனை நினைவுகூர்வதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் இன்று கூடிய தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
இந்தக் கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பசுமை இயக்த்தினரும் கையொப்பமிட்டனர்.
அரசாங்கம் தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் போராட்டங்களை நடத்தப்போவதாக இந்தக் கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.