
கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் விசேட விமான சேவைகளை ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் இவ்விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விமான சேவைகளை அதிகரிக்க ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்த, இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்த நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர் கண்காணிக்கவுள்ளதாகவும், எதிர்க்கட்சியினரும் இணைந்து கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு, தவறுகளைச் சுட்டிக்காட்டவும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேபோன்று, பணம் செலுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமானதல்ல என்பதுடன் விரும்புபவர்கள் மாத்திரம் அவ்வாறு பணம் செலுத்தி தனிமைப்படுதலுக்குச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.