
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள உத்தரவாத நெல் விலைக்கு ஏற்ப எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரிசிக்கான நிர்ணய விலையை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதன்போது சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பாரிய அளவிலான அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.