தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என்று கூறினாலும், தகவல் தொழில்நுட்பத்துறையில் அவர்கள் இலங்கை அரசாங்கத்தை விடவும் முன்னணியில் இருந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சாணக்கியன், 2003ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்த ‘வன்னி டெக்’ என்ற தகவல் தொழில்நுட்பத் திட்டத்தை உதாரணமாக கூறி உரையாற்றினார்.
”அவர்களின் ஆற்றலுக்கு நிகரான இவ்வாறான திட்டங்கள் இதுவரையில் நாட்டில் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என்று கூறினாலும், தகவல் தொழில்நுட்பத்துறையில் புலிகள் அரசாங்கத்தை விட முன்னணியில் இருந்தனர்” என்றார்.
அத்துடன் அது தொடர்பான தகவல்களையும் சாணக்கியன் சபையில் முன்வைப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதனை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பை சார்ந்த சஞ்சீவன் என்னும் நபர் நீருக்கு அடியில் சென்று தகவல்களை சேகரிக்கும் ஓர் கண்டுபிடிப்பை செய்துள்ளார். இதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். இப்படியானவர்களை ஊக்குவித்து எமது நாட்டின் வளர்ச்சியில் பங்காற்ற வைக்க வேண்டும் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.