July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் 25 பேருக்கு கொரோனா தொற்று : இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 46,755 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 638 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,661ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 3  உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்வடைந்துள்ளது.

மட்டக்களப்பில் 25 பேருக்கு தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனையில்  இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட  25  பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி மாவட்டத்தில்  தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் ஏறாவூர் சுகாதார பிரிவில்  இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 3 பேருக்கும்,   காத்தான்குடி சுகாதார பிரிவில் 20 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வடக்கில் 11 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று அடையாளம் காணப்பட்ட மற்றைய தொற்றாளர்களில் 7 பேர் பூநகரியையும், 2 பேர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பூநகரியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் அந்த விடுதியில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டன. அதனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து பூநகரிக்கு திரும்பி வந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தப்பி வந்தமை தொடர்பில் கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அத்தொடு மூவருக்கு தொற்று உள்ளமை தொடர்பிலும் கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

கோரோனா வைரஸ் தொற்று உள்ள மூவரையும் கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள், ஏனைய 8 பேரையும் சுயதனிமைப்படுத்தியிருந்ததுடன் அவர்களின் பீசீஆர் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 7 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு தொற்று

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உள்ளது என இன்று கண்டறியப்பட்ட நிலையில் மாணவனிடம் இன்று
பீசீஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அவரது மாதிரிகள் உடனடியாக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்திய போது கோரோனா வைரஸ் தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை – மூதூர், கிளிவெட்டியில் ஒருவருக்கு  தொற்று

திருகோணமலை – மூதூர், கிளிவெட்டி பகுதியில் தங்கியிருந்து பணி புரியும் “MAG” நிறுவன ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ‘அன்டிஜன்’ பரிசோதனைகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் இன்று மாலை இந்த நிறுவனத்தின் 40 ஊழியர்கள் கிளிவெட்டி உப பிரதேச சபை வளாகத்தில் வைத்து ‘அன்டிஜன்’ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே யாழ். பரித்தித்துறையைச் சேர்ந்த குறித்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இவர் பணி நிமித்தம் கடந்த 5ஆம் திகதி பரித்தித்துறையில் இருந்து கிளிவெட்டி பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், இவருடன் தொடர்புகளைப் பேணிய 10 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.