இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளதாகவும் அவர்கள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல என்றும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாய்மொழி மூல வினாகளுக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும், இதுவரையில் அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2020.10.31 ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மரண தண்டனைக் கைதியொருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்பட்ட ஒருவரும், ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்யப்பட்டவர்கள் ஏழு பேரும், சாதாரண கைதிகள் மூவரும், தண்டனை பெற்று மென் முறையீடு செய்யப்பட்ட கைதிகள் மூவரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனைவருமே தமிழ் கைதிகள் என குறிப்பிட்டுள்ள நீதி அமைச்சர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் எவரும் தற்போது இலங்கையின் எந்தவொரு சிறையிலும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு சட்டதின் கீழும் வழக்குத் தாக்கல் செய்யாது, எவரையும் நீண்ட காலம் தடுத்து வைக்கவோ அல்லது பிணை வழங்காது தடுத்து வைக்கவோ முடியாது என்பதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் வழக்குத் தொடுத்து, அவர்களது குற்றம் நிரூபிக்கப்படவோ அல்லது விடுதலை செய்யவோ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.