இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.