இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் உட்பட 37 சட்டங்கள் காலத்துக்கேற்ற விதத்தில் திருத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 வயதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே சட்ட திட்டங்களை புதுப்பிப்பதன் ஊடாக தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் போது பல்வேறு விதமான மக்களும், அவர்களது கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில் கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.