இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்தபோதே, இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது.
ஒருமித்த நாட்டுக்குள்ளேதான் தமிழர்கள் தீர்வு கேட்கின்றதாகவும் அவர்களின் அபிலாஷைகளான நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது இலங்கை அரசின் பிரதான கடமை என்பதை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் தான் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமையில் மாற்றம் வேண்டாம் எனவும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை அரசிடம் தான் வலியுறுத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் சமர்ப்பித்திருந்த முன்மொழிவு வரைபை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் இதன்போது கையளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.