July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எகிறும் தேங்காய் விலை; மரத்தில் ஏறி நின்று ஊடகங்களுக்கு பேசிய அமைச்சர்!

இலங்கையில் தேங்காய் விலை வேகமாக உயர்வடைந்து வருகிறது. உள்ளூர் சந்தைகளில் இதுவரையில் 60 முதல் 80 ரூபா வரையில் விற்பனையான தேங்காய் ஒன்று, தற்போது 100 முதல் 130 ரூபா வரையிலான விலைகளுக்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் அதிகரித்துச் செல்லும் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்ட மொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை , பனை மற்றும் கிதுல் உற்பத்திகளுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரமொன்றில் ஏறி, தேங்காய் பறித்துக்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் தேங்காயுடன் தொடர்புடைய உற்பத்தி பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றமையே தேங்காய் விலை அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதற்கமைய விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.