July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு- கிழக்கில் மீண்டும் கொரோனா அச்சம்: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 46,230 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 761 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,023 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 2 உயிரிழப்புகள் பதிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக உயர்வடைந்துள்ளது.

திருகோணமலையில் 8 பேருக்கு தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் 8 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட தெவனிபியவர பகுதியில் 16 வயதுடைய மாணவரொவருமாக எட்டு பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று 41 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் 41 நாட்களின் பின்னர் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் சகல பிரதேசங்களும் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8ஃ1, 8ஃ3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை- 08 பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1, ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பீ.சீ.ஆர். பரிசோதனை

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுமாறாக பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள், உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், பயணிகள் என பலரிடமும் பீ.சீ.ஆர். பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.