July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பாடசாலை மாணவர்களுடைய உளவிருத்தி தொடர்பில் அதிக அக்கறை தேவை”

File Photo Facebook/ UNICEF Sri Lanka

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்களுடைய உளவிருத்தி செயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகள் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இது மிகவும் அவசியமான முயற்சியாகும். மாணவர்களின் கல்வி கடந்த வருடம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அவர்களுடைய கல்வியை மீண்டும் செயற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இதற்காக மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

குறிப்பாக சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் மற்றும் கைகளை கழுவுதல் தொடர்பான முன்னெச்சரிக்கைகளை கடைப் பிடித்தல் அவசியம். என்பதுடன் பாடசாலைகளுக்கு காய்ச்சல், தொண்டை நோ, இருமல் உள்ளவர்கள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இழந்த கற்றல் செயற்பாடு மீட்கப்பட வேண்டும். சில பின்தங்கிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகும் தன்மை அதிகமாக காணப்படுவதாக பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அது நீண்டகால நோக்கில் ஒரு சமூகப் பிரச்சனையாக மாறும். எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத வேண்டிய மாணவர்களுக்கு குறைந்தது நான்கு மாதங்களுக்கு பிறகு மாதிரி பரீட்சை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் வீடுகளில் தமது நேரத்தை செலவிட்டுள்ளமை அவர்களுடைய உளவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். எனவே மாணவர்களை குழு செயற்பாட்டில் ஈடுபடுத்த பாடசாலை நிர்வாகம் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட இரண்டு மடங்காக நேரத்தினை விளையாட்டுக்கு ஒதுக்குவதன் மூலம் அவர்களுடைய உளவிருத்தி செயற்பாட்டினை அதிகரிக்க முடியும் என சி.யமுனாநந்தா மேலும் தெரிவித்தார்.

நீண்டகாலமாக வீடுகளிலிருந்து மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு வந்திருக்கின்றார்கள் எனவே பாடசாலைகளில் பாடவிதானத்தினை முடிப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழிக்காது உள சமூக தாக்கங்கள் தொடர்பிலும் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.