யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறைக் கும்பல் ஒன்றினால் செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதி வெடி மற்றும் கைக்குண்டு ஆகியன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்றைய தினம் அந்த மயானப் பகுதியில் இருந்து அந்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை யாழ். கல்வியங்காடு பகுதியில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ‘ஆவா’ வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவேடி என்பனவும் மறைத்து வைத்திருந்தமை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செம்மணி இந்து மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.