கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப நிபுணர் குழுவினால் ஆய்வுசெய்யப்பட்ட பின்பே நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் தொற்று நோய்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழு, ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே, இவர் இதனைத் தெரிவித்தார்.
“இலங்கைக்குள் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுகொடுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் கையாளப்படுகின்றது.
அதற்கமைய சுகாதார பணிப்பாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவினரை உள்ளடக்கிய நிபுணர் குழு இந்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் உலகில் இதுவரையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்தும் அவற்றில் இலங்கைக்கு ஏற்ற தடுப்பூசி எதுவென்றும் நிபுணர் குழு ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
அதேபோல் தடுப்பூசியை கொண்டுவந்தால் அதனை களஞ்சியப்படுத்தும் முறைமை மற்றும் அதற்கான செலவுகள் குறித்தும் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.
கொவெக்ஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளதனால் இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் தொற்றுநோய் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் மூலமாக முறையான தடுப்பூசி குறித்த பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் கொரோனாவுக்கு எதிரான இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.