January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கு நன்றி’

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்களுக்கு எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதிகார பகிர்வு விடயத்தில் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் முன்வைத்துள்ள இவ் கருத்துகளுக்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரது நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால், அதற்காக தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.