பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறவேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் அதிலிருந்து வெளியேறினால் அனைவரும் இணைந்து ஒன்றாக போராடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஹட்டன், மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பழனி திகாம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். அதனை நோக்கியே பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் கையொப்பமிடமாட்டேன் என்று வடிவேல் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்கின்றோம். அதேபோல் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் ஏனைய தொழிற்சங்கங்களும் வெளியேறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.