கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எந்த தீர்மானமும் எமது அரசாங்கம் எடுக்கவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை கூறினார்.
கொழும்பு துறைமுகம் எமக்கு மிக முக்கிய கேந்திர நிலையமாகும். எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பு கிழக்கு முனைய அபிவிருத்தி குறித்து 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுடனும், 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டன.அதன் பின்னர் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது என தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் கொழும்பு கிழக்கு முனையத்தை முழுமையாகவோ அல்லது பகுதி அளவில் கூட சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க எமது அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், கடந்த 2005-2015 ஆட்சிக் காலத்தில் கொழும்பு தெற்கு முனையத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்தோம்.
அரச -தனியார் முறைமையின் கீழ் 35 ஆண்டுகால ஒப்பந்தம் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு முனைய அபிவிருத்தியும், தெற்கு முனைய அபிவிருத்தியையும் தற்போது எமது ஆட்சியில் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் பிரதமர் கூறினார்.